(தயாளன்)
1.இதனை நடைமுறைப்படுத்துவதானால் முதலில் பாதிக்கப்படப்போவது அவரே. உள்ளுராட்சித்தேர்தலின் போது யாழ்.மாநாகர சபை முதல்வர் யார் என்பதை தேர்தலின் பின் முடிவெடுப்போம் என தமிழரசு மட்டுமல்லாது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த அனைத்துக் கட்சியினருமே தீரமானித்தனர். இம்முடிவினைத் தட்டச்சுச் செய்து கொண்டிருக்கும் போதே வெளியில் வந்த சுமந்திரன் "ஆர்னோல்ட்தான் மேயர்" என அறிவித்தார். தொடர்ந்து வந்த தலைவரிடமும், செயலரிடமும் "ஆர்னோல்ட்தான் மேயர் என சுமந்திரன் குறிப்பிடுகிறாரே?" என ஊடகவியலாளர்கள் கேட்டபோது "அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை" எனப்பதிலளித்தனர். அப்போதைய செயலாளர் துரைராஜசிங்கம் தற்போதும் சுயநினைவுடன்தான் இருக்கிறார் என நம்புகிறோம். சிறிது நேரத்தின்பின் மீண்டும் அங்கு வந்த சுமந்திரனிடம் தலைவர், செயலரின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியபோது "அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் ஆர்னோல்ட்தான் மேயர்" என மீண்டும் சூளுரைத்தார் சுமந்திரன். அப்படியானால் அப்போதே கட்சி முடிவை ஏற்க மறுத்தமைக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கீழ்ப்படிவுள்ள சிப்பாயாக நடக்க முடியாத ஒருவரால் கட்டளையிடும் தளபதியாக எப்படி விளங்க முடியும்?
2. "இறுதி யுத்தத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலையே" என்ற ஒரு தீர்மானத்தை வடக்கு முதல்வர் மாகாண சபையில் கொண்டுவந்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு தற்போதைய பதில்த்தலைவரும் பங்களித்தார். இதனைத்தொடர்ந்து முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருமாறு அண்மையில் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட விந்தன் கனகரத்தினம் வலியுறுத்தப்பட்டார். சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், அஸ்மின் ஆகியோர் யு.எஸ்.ஹோட்டலில் நடந்த சந்திப்பின் போது இத்தீரமானத்தைக் கொண்டு வந்தால் சுமந்திரன் தன்னைக் கவனித்துக்கொள்வார் எனத் தனக்கு இந்த இருவரும் உறுதியளித்ததாக விந்தன் மேலும் தெரிவித்தார். கட்சியின் அனுமதியின்றி நடைபெற்ற இச்சதி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆர்னோல்ட், அஸ்மின் முதலானோர் மீது விசாரணை எப்போது நடைபெறும்? இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தை எனது கையில் திணித்து விட்டார்கள் எனத்தெரிவித்த பதில் தலைவர் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்டலாம் அல்லவா?
3. கரைச்சிப் பிரதேச சபைக்கான தேர்தலில் கட்சி உறுப்பினர் குமாரசிங்கம் தலைமையிலான சுயேட்சைக்குழுவொன்று கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர்களுக்கெதிராகக் களமிறக்கப்பட்டது. இக்குழுவில் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒருவர் "நாங்களும் தமிழரசுக்கட்சியினரே; எமது வழிகாட்டி சுமந்திரனே" எனப்பிரகடனப்படுத்தினார்.
இந்தச் சுயேட்சைக் குழுவினரும் சந்திரகுமார் அணியினரும் இணைந்து ஆட்சி அமைப்பதே இப்பகிரங்கச் சூழ்ச்சியின் நோக்கம். தனது பிள்ளையின் ஏடு தொடக்கலைக்கூட சுமந்திரனைக்கொண்டு நடத்தும் அளவுக்கு அவரது பக்தனான சுப்பிரமணியம் பிரபா என்பவர் இந்த இணைப்பை நெறிப்படுத்துவதற்காக சந்திரகுமார் அணிக்குள் அனுப்பப்பட்டார். இச்சதி நடவடிக்கை பற்றி விரிவாக விசாரணை நடாத்தி சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் எத்தனையாம் ஆண்டு நடவடிக்கை எடுக்க கட்சி முயலும்?
4. இனப்படுகொலை என்பதற்குச் சாட்சியங்கள் இல்லை; ஆதாரங்கள் இல்லை என பலமுறை ஊடகங்களுக்குத் தெரிவித்தார் சுமந்திரன். இது கட்சியின் நிலைப்பாடா? இவ்வாறான நிலைப்பாட்டை கட்சி எப்போது எடுத்தது? எடுக்கவில்லை எனில் இந்த அறிவிப்புகள் தொடர்பாக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
5. சர்வதேச விசாரணை தேவையில்லை; உள்ளக விசாரணையே போதும் என்ற சுமந்திரனின் அறிவிப்பு ஊடகங்களில் வெளியானது. இவ்வாறான முடிவை கட்சி எடுத்ததா? கட்சியே எடுத்திருந்தாலும் குறைந்தபட்சம் இசைப்பிரியா, பாலச்சந்திரன் மரணங்களுக்காவது நீதிகிடைக்க எப்போது கட்சி பாடுபடும்?
6.காடு மலை எல்லாம் தேடினாலும் பெண் வேட்பாளர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று அறிவித்தார் சுமந்திரன். எந்தெந்தக் காடுகள், மலைகளில் தேடினீர்கள்? யார் இந்த முயற்சியில் இறங்கினார்கள்? என்று கட்சியினால் அறிவிக்க முடியுமா? மகளிர் அமைப்புடன் கட்சி ஒத்துழைக்கவில்லையா? கட்சியுடன் அந்நியப்பட்டுள்ளார்கள் எனில் இந்நிலையைப்போக்க கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது? சுமந்திரனின் அறிவிப்பு தவறெனில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
7. கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுக்க முன்னரே தமிழ்ப்பொது வேட்பாளரைத் தோற்கடித்தே தீருவேன் என்று யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் அறிவித்தார். இவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுக்க எப்படி முடிகிறது? சுமந்திரனின் முடிவுதான் கட்சி முடிவாக எடுக்கப்படுகின்றதா? கட்சி முடிவுக்கு எப்போது அவர் கட்டுப்படுவார்?
8. கட்சிக்கு எதிராக வழக்குப்போட்ட உறுப்பினர்கள் சுமந்திரனுடன் பகிரங்கமாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கட்சி ஏற்கிறதா? கட்சித்தலைவர் மாவை பொது வேட்பாளரின் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றினார். அவரின் பணிமனைக்குச் சென்று ஆசீர்வதித்தார். இந்நிலையில் பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தமைக்காக கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம்கோரி கடிதம் அனுப்பியதில் என்ன நியாயம் உள்ளது? குமாரசிங்கம் விடயத்தில் ஒரு சட்டம்; பொது வேட்பாளர் விவகாரத்தில் வேறொரு நிலைப்பாடு என்பதைக்கட்சி ஏற்றுக்கொள்கிறதா?
சுமந்திரன் அணி, சந்திரகுமார் அணி, கஜேந்திரகுமார் கட்சி என்பன
தலைகீழாக நின்றும் யாழ். தேர்தல் மாவட்டத்தில் பொது வெட்பாளர் 116688 (ஒரு இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தெட்டு) வாக்குகள் பெற்றார். கடந்த பொதுத்தேர்தலில் சுமந்திரன் பெற்ற விருப்பு வாக்குகள் 15539. இந்த யதார்த்த நிலையைக் கட்சி எப்போது உணரப்போகிறது? கடந்த உள்ளுராட்சித்தேர்தலில் தனது சொந்த வட்டாரமான குடத்தனையில்கூட கட்சியை வெல்ல வைக்க முடியாதவரின் பின்னால் கட்சி ஏன் இழுபடுகின்றது?
9. இறுதிப்போரினை வழிநடத்திய பொன்சேகா, அக்காலகட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மைத்திரி, ஆயிரம் விகாரைகளை (தையிட்டி அடங்கலாக) அமைத்தே தீருவேன் என அடம்பிடிக்கும் சஜித் ஆகியோருக்கு வாக்களிக்கக் கோரும் தமிழரசுக்கட்சி பொது வேட்பாளர் விடயத்தில் மட்டும் கட்சிக்கட்டுப்பாடு என அடம்பிடிப்பது ஏன்? மாவை ஆதரவளித்த பின்னரும் ஏன் இந்தச் சிங்கள விசுவாசம்? இந்தச் சிங்கள விசுவாசிகளுக்கு இப்போது ஏன் இந்தக் கட்சிக்கட்டுப்பாடு, இனப்பற்றுதல் போன்ற நாடகங்கள்?
10. வடக்கு முதல்வருக்கு ஏற்கனவே செயலராக விளங்கிய துரைராஜசிங்கம் அனுப்பிய கடிதம் ஒன்றில் "அனந்திக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கக்கூடிய சூழல் இருந்தபோது நாம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களுக்கு அதிகூடிய வாக்குகள் ஏற்பாடு செய்தோம்" என எழுத்து மூலம் அறிவித்தார். அச்சமயத்தில் நடந்த கோளாறுகளை இப்போதாவது கட்சி வெளிவிடுமா?
11. கடந்த பொதுத்தேர்தலில் சுமந்திரன் மீதான கடுப்புதான் NPP க்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தமையும், சுயேட்சை அணி அர்ச்சுனாவின் தெரிவும் என்பதை கட்சி எப்போது உணர்ந்து கொள்ளப்போகிறது?