மட்டக்களப்பு, பெரிய போரதீவு பாரதி மகா வித்தியாலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொங்கல் விழாவும் கலைநிகழ்வுகளும் நேற்று (13.02.2026)ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
பாடசாலையின் அதிபர் கனபதிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் சஞ்சீவன் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கமாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
இவ்விழாவானது மாணவர்களிடையே எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாடசாலை சமூகத்தினர் மத்தியில் ஒரு நல்லுறவை வளர்க்கும் விதமாகவும் அமைந்தது என அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.