மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள்இன்று (27.02.2026)ஆம் திகதி காலை காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, 44 வயதுடைய அருள்சிவம் கோமதி, மற்றும் 62 வயதுடைய ஞானசீலன் அருளம்மா ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காட்டு யானை வீடு ஒன்றை உடைத்து சேதமாக்கிய அட்டகாசம் புரிந்து வருவதையடுத்து அப்பகுதியில இருந்து யானையை வெளியேற்றும் நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மாவட்ட மக்கள் பெரும் பய பீதியடைந்துள்ளதுடன் கடந்த 13 ம் திகதி வாழைச்சேனை நகருக்குள் யானைகள் ஊடுருவி தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை யானை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.