போரதீவுப்பற்றில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) ஆம் திகதி உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளைநிலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெல்லாவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக போரதீவுப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மனித – யானை மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கைகள் யானைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை