இலங்கை திருநாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (04.02.2026) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், சர்வமத் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந், முப்படை உயரதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கழகப்பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
தாய் திருநாட்டின் தேசியக்கொடியை அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகள், மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை என்பன நிகழ்த்தப்பட்டு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அணி நடை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி மற்றும் சாரணர் மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு நடை என்பன இடம்பெற்றன.
இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கு அதிதிகளினால் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதும், மாவட்ட செயலக வளாகத்தில் அதிதிகளினால்
தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.