அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதனையடுத்து, அதனைத் தடுப்பதற்கான விசேட மற்றும் பாரிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நேற்று (11.02.2026) முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் (திருமதி) எஸ்.எப்.சாரா சராப்டீன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, முப்படையினர், மருதமுனை பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்கின.
பல்வேறு குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மருதமுனை மற்றும் பெரியநீலாவணைப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை மிகத் தீவிரமாகச் சோதனையிட்டனர். குறிப்பாக, நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட வெற்றுக்காணிகள் இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 1851 வீடுகள் 5 பாடசாலைகள் மதஸ்தலங்கள், பொது இடங்கள் என மொத்தமாக 1881 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 341 இடங்கள் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டதுடன் 16 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நுளம்பு பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கியிருந்த டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்ட கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டது.
இதேவேளை, பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஷார், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத், கல்முனை தெற்கு AMOH சமூக நல விசேட வைத்தியர் டொக்டர் எம்.எம்.பாயிஸ், டொக்டர் அஸ்மி, பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பிரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.