அம்பாரை மாவட்ட சுற்றுலா ஒருங்கிணைப்பு உப குழுக்கூட்டம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், சுற்றுலா ஒருங்கிணைப்பு உப குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பிரியந்த குமார் விஜேரத்ன தலைமையிலும் இன்று (09.02.2026)ஆம் திகதி இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் அம்பாரை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் அம்பாரை மாவட்டத்தில் செயற்படுத்துவதற்கு முன்மொழிந்துள்ள சுற்றுலா அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இவற்றுக்கான சபை அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
அருகம்பே சுற்றுலா வலயத்திற்கான வர்த்தமானியை வெளியிடுதல், அருகம்பே கடற்கரை வலயத்திற்கு சோலா முறைமையொன்றை நிறுவுதல், நிந்தவூர் களப்பினை சுற்றுலா விடயங்களுக்காக அபிவிருத்தி செய்தல், இறக்காமம், தீகவாபி வீதியில் இயற்கை பூங்கா ஒன்றை அமைத்தல், சம்மாந்துறை கைக்காடகுளம் சுற்றுலா விடயங்களுக்காக அபிவிருத்தி செய்தல், அட்டாளைச்சேனை கோணாவத்தை குளம் ஜோய் படகு சேவையொன்றை அமைத்தல், தமன பிரதேச செயலகத்திலிருந்து மலையடி ஊடாக 08 ஆம் கட்டை வரை அக்கரைப்பற்று அம்பாரை பிரதான வீதியை அபிவிருத்தி செய்தல், தொடர்ந்தும் பக்மிடியாவ இருந்து லாகுகல வரையான வீதி மறுசீரமைப்புச் செய்து சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றல், சுற்றுலா அபிவிருத்திக்கு காரைதீவு களப்பு வலயத்தை சுற்றாடலுக்கு உகந்த முறையில் அபிவிருத்தி செய்தலும் படகுச் சேவையொன்றை அமைத்தல் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இத்திட்டங்களுக்கான திட்ட வரைபுகளை அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் விரைவாகக் கையளிக்குமாறும் உப குழுவின் தலைவரினால் இங்கு பணிப்புரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, அஸ்ரப் தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாசித், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், உள்ளுராட்சி ஆணையாளருமான ஏ.எல்.அஸ்மி, அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.