கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பகுதியில் முதியவர்களை மயக்கமடையச் செய்து அவர்களது தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் புதிய வகை மோசடி அம்பலமாகி உள்ளது.
நேற்று முன்தினம் ராகம சந்தைப்பகுதிக்கு அருகில் உள்ள மாதா சொரூபத்திற்கு முன்பாக மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, குட்டையான தோற்றமுடைய வயதான பெண் ஒருவர் அவரை அணுகியுள்ளார்.
ஆரம்பத்தில் கை வைத்தியம் செய்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என அந்த பெண் மூதாட்டியிடம் கேட்டுள்ளார்.
தனது கணவர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்வதாகக் கூறி, சிறிய காகிதம் ஒன்றில் சுற்றப்பட்ட இரண்டு கற்களை அந்த மூதாட்டியின் கையில் கொடுத்துள்ளார்.
அந்தக் கற்களைக் கையில் வாங்கி மூதாட்டி பார்த்துக் கொண்டிருந்த போதே, அவர் மெல்ல மெல்ல சுயநினைவை இழந்துள்ளார்.
மீண்டும் அவர் தெளிவடைந்தபோது, அங்கிருந்த அந்த பெண் காணாமல் போயுள்ளார். அத்துடன், மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியும் கொள்ளையிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மூதாட்டி இது குறித்து ராகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதே போன்ற பாணியில் மக்கள் ஏமாற்றப்பட்ட 153வது சம்பவம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெரியாத நபர்கள் வீதிகளில் பேச முற்படும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.