மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை - வாகனேரி பிரதான வீதியில் இன்று (12.02.2026)ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது
இன்று காலை, பாதிக்கப்பட்ட இளைஞர் தனது உறவினர் ஒருவரை சந்தைக்கு செல்வதற்காக மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் வாகனேரி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.
இதன்போது, காவத்தமுனை பால்பண்ணைக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது, வாகநேரியிலிருந்து கிறவல் (கற்கள்) ஏற்றி வந்த லொறி ஒன்று, எதிர்பாராத விதமாக இளைஞரின் மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளானதுடன், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பாக விரைந்து செயற்பட்ட வாழைச்சேனை பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், விபத்துக்குள்ளான லொறி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் பாரவூர்திகளின் வேகம் மற்றும் வீதி ஒழுங்குமுறைகள் குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.