மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், அவை பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே பெறப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிக கப்பல்கள் வராவிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்கு இடையூறின்றி விநியோகம் மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே சிறிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாயினும், ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.