மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா நேற்று (13.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ.உதயகாந்த் தலைமையில், மட்டக்களப்பு - கோவில்போரதீவு வெள்ளை நாவலம்பதி ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.
தமிழர் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் புதிர் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு பொங்கல் பானைக்கு புத்தரிசியிடப்பட்டு பொங்கல் பொங்கி ஆலயத்தின் மூல மூர்த்திக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
சூரிய பகவானுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் சங்கத்தின் உப தலைவர் யூ.ஆதம், செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தன், நிர்வாக சபை உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.