மட்டக்களப்பு சுரவணையடியூற்றில் தீப்பற்றி வீடு முற்றாக தீக்கிரை.!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று(13.02.2026)ஆம் திகதி  ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலானது.

சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் – சரோசாதேவி என்பவருக்குச் சொந்தமான வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.


வீட்டின் உரிமையாளர் அயல் வீட்டில் இருந்தபோது, திடீரென வீடு தீப்பற்றியதை அயல்வாசிகள் கண்டு கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்றபோது, வீடு கட்டுப்பாட்டை மீறி எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீட்டினுள் இருந்த பொருட்களை மீட்க முயன்றபோது, உரிமையாளரின் முகப்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
வீட்டிலிருந்த பெறுமதியான உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயினால் முற்றாக அழிந்துள்ளன.முதற்கட்ட விசாரணைகளின்படி, வீட்டில் ஏற்பட்ட மின்னழுத்தக் கோளாறே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன் மற்றும் வட்டார உறுப்பினர் பா. அனோஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சேத விவரங்களையும் கேட்டறிந்தனர்.மேலும், களுவாஞ்சிகுடி மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறையே இவ்வாறான தீ விபத்துகளுக்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதியது பழையவை