தான் கடுமையாக எதிர்த்த 'நிகழ்நிலை காப்புச் சட்டத்தை' (Online Safety Act) பயன்படுத்தி, தமிழ் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் உட்பட 50 பேருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் பின்னணி:-
தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, இச்சட்டத்தின் 24ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகங்களில் வெளியான நேர்காணல்கள் மற்றும் அரசியல் விமர்சன நிகழ்ச்சிகளை ‘தடைசெய்யப்பட்ட கூற்றுக்களாக’ கருதி, அவற்றை உடனடியாகத் தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்கள்:-
இந்த வழக்கின் கீழ் மொத்தம் 50 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஊடகங்கள்: தமிழ்வின், IBC, லங்காசிறி ஆகியவற்றின் பணிப்பாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் என 25 பேர்.
தனிநபர்கள்,முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்த 25 நபர்கள். இதில் பெரும்பாலானோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள்:-
அமெரிக்காவைச் சேர்ந்த Facebook மற்றும் Meta Platform நிறுவனங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
அரசியல் தளத்தில் எழும் விமர்சனங்கள்:
நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு "கருப்புச் சட்டம்" எனக்கூறி சாணக்கியன் எம்.பி. அதனைத் தீவிரமாக எதிர்த்திருந்தார். ஆனால், தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி விமர்சனங்களை முடக்க முனைவது அரசியல் ரீதியாகப் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"சட்டம் ஒரு இருட்டறை; ஆனால் இந்த நடவடிக்கை வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு பின்னடைவாக அமையலாம்" என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இந்த வழக்கின் முதலாவது விசாரணை இன்று (13.03.2026, வெள்ளிக்கிழமை) கொழும்பு நீதிமன்றில் நடைபெறவுள்ளது.