வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட நில அபகரிப்புகளைத் தடுக்கும் நோக்கில், கிழக்கு மாகாணத்தின் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்த பாரிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (28.02.2026)மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க மிஷன் மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பண்ணையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களால் ஏற்படப்போகும் நில அபகரிப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டம்:-
இத்திட்டத்தினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள்.
மகாவலி அபிவிருத்தி திட்டம்:-இத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சூட்சுமமான நில ஆக்கிரமிப்புகள்.
மயிலத்தமடு - மாதவனை பிரச்சினை:-கால்நடை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் தரை அபகரிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள்.
சட்ட ரீதியான வழிகாட்டல்:-
முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் அவர்கள் இக்கூட்டத்தின் முக்கிய வளவாளராகக் கலந்துகொண்டு, நில அபகரிப்புக்கு எதிரான சட்ட ரீதியான நுட்பங்கள் மற்றும் காணி சட்டங்கள் குறித்துத் தெளிவான விளக்கங்களை வழங்கினார். ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் தனித்தனியாகவும், கட்சி ரீதியாகவும் பிரிந்து நின்ற அமைப்புகளை ஒன்றிணைத்து, நில அபகரிப்புக்கு எதிராகப் போராட ஒரு "பொதுக் கட்டமைப்பு" உருவாக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்களாவன:-
நில அபகரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பித்தல்.
குறித்த ஆவணத்தை துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து, காணி அபகரிப்பு தொடர்பான "இறுதி வரைபை" (Final Draft) தயாரித்தல்.
நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக எவ்வகையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து இந்த வரைபின் அடிப்படையில் தீர்மானித்தல்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காக அனைத்துத் தரப்புகளும் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருப்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.