மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து சென்ற கனரக வாகனம் காவல்துறையின் உத்தரவை மீறி நிறுத்தாது தப்பி ஓடிய நிலையில் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை(05.03.2026) இடம்பெற்றதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் வைத்து நிறுத்துமாறு காவல்துறையினர் பணித்தனர்.
எனினும் காவல்துறையின் கட்டளையை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து காவல்துறையினர் துரத்தி சென்ற நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியதையடுத்து அதனை துரத்தி சென்ற நிலையில் குறித்த வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தது
இதனையடுத்து காவல்துறையினர் குறித்த வாகனம் தொடர்பாக ஏறாவூர் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதி சோதனை தடையை அமைத்து வாகனத்தை நிறுத்துமாறு பணித்த போது அந்த தடையை மீறி கனரக வாகனம் மட்டுநகர் நோக்கி தப்பி ஓடிய நிலையில் அந்த வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி துப்பாகி பிரயோகம் மேற்கொண்டார்.
இதனையும் மீறி குறித்த வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் நகரின் திருகோணமலை வீதி வை' சந்தி பகுதியில் வீதி சோதனை அமைத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்.