மட்டக்களப்பில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்ட "மகளிர் தின"எழுச்சிப் பேரணி.!

​சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்லாயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் "அரசியல் பாதையில் அவள்" எனும் தொனிப்பொருளிலான பிரம்மாண்டமான நிகழ்வு நேற்று (08.03.2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

​எழுச்சிப் பேரணி
​தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில், கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து இப்பேரணி ஆரம்பமானது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் உணர்வுப்பூர்வமாக இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

 பேரணியானது மட்டக்களப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேவநாயகம் மண்டபத்தை அடைந்தது.

​தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்றனர்.

​மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

​கட்சியின் பிரதேச மகளிர் அணிகளினால் பெண்களின் ஆற்றல்களைப் பறைசாற்றும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.

​கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரத் துறைகளில் சாதனை படைத்த பெண்கள் மற்றும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற மகளிர் உறுப்பினர்கள் அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கான அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய கொள்கை பிரகடனம் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டது.

​இந்த நிகழ்வானது, கிழக்கு மாகாணப் பெண்களின் அரசியல் விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை