மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத்தில், தமிழ்த் தேசிய அரசியலின் சமகால நிலை மற்றும் தமிழர்களின் நிகழ்காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த விசேட மக்கள் கலந்துரையாடல் நேற்று (28.02.2026)ஆம் திகதி நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் வீ. ஆர் .மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை தமிழர் பண்பாட்டு உணர்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடிஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், கிருஷ்ணபிள்ளை
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராசா
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மகளிர் அணி செயலாளர் திருமதி ரஜனி
மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலப்பிள்ளை
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வசந்தராஜா
ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நகுலேஷ் கலந்துகொண்டு டனர்.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய அனைத்துப் பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்தாக "தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை" வலியுறுத்தினர். சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் தற்போதைய இக்கட்டான சூழலில் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழர்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என மக்கள் தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.
அரசியல் தலைமைகளுக்கும் மக்களுக்குமான இந்த நேரடித் தொடர்பாடல், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்தது.