​கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்.

​கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்று (25.03.2026) புதன்கிழமை தனது 77ஆவது வயதில் காலமானார்.

​உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அன்னாரின் மறைவு சம்பவித்துள்ளது.


ஊடகத்துறையில் சுமார் 60 ஆண்டு காலமாக நடுநிலை தவறாமல் பணியாற்றிய இவர், வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப் பணியைத் தொடங்கினார். 

அதனைத் தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, தினகரன், உதயன், ஈழநாடு, நவமணி, தினக்குரல், சுடர்ஒளி, தமிழன் உள்ளிட்ட முன்னணி பத்திரிகைகளிலும் தனது ஆளுமையைச் செலுத்தினார்.

​மேலும், சக்தி தொலைக்காட்சி, இலங்கை வானொலி, சூரியன் எப்.எம் உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களிலும், தமிழ்நெட், தேனாரம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் அரும்பணியாற்றினார்.

அன்னார் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில்தான், அந்தச் சங்கத்தின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது என்பது குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மானிடத்தின் தமிழ்க்கூடல்' நிகழ்வின் போது, ஐந்து முக்கிய மரக்கன்றுகளில் ஒன்றை நடுவதற்கு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை, இவரது நேர்மையான மற்றும் நடுநிலையான ஊடகப் பணிக்குக் கிடைத்த உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

​இறுதி மூச்சு வரை சகல இன மக்களினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளராகத் திகழ்ந்த ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் மறைவு, இலங்கையின் ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புதியது பழையவை