மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு, கல்முனை ஊடாக காத்தான்குடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை (09.03.2026) ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் நீதவான் ரி. பிரதீபன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பான முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இவ்வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தசாப்தங்களைக் கடந்த இந்த நீதிப் போராட்டத்தில், உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீட்டு, உண்மைகளைக் கண்டறிவதற்கான ஒரு முக்கிய ஆரம்பமாக இந்த அகழ்வு நடவடிக்கை அமையவுள்ளது.
இந்த அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் பிரசன்னமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.