சர்வதேச அதிக உடல் எடை தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று (04.03.2026) ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நீழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார், தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ருதேசன் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
"உடல் எடையை கட்டுப்படுத்துவோம் வாழ்வினை காப்போம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து இந்த நடைபவனி ஆரம்பமானது.
அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களால் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
சர்வதேச எடை குறைப்பு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதிக உடல் எடையினால் ஏற்படும் தொற்றா நோய்களின் தாக்கம், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அன்றாட உடற்பயிற்சிகள், முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கையானது, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.