ஈரான் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது உலகளாவிய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மாத்திரமல்ல, அது ஏகாதிபத்தியத்தினால் அடக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் தேவையுமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, அல் இபாதா கலாசார மன்றத்தின் 15 ஆவது இப்தார் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பெரிய பாலத்தடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்...
சர்வதேச அரசியல் மற்றும் ஏகாதிபத்திய விமர்சனம்
"சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியங்களை நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம். இதன் விளைவாக முழு உலகப் பொருளாதாரமும் இன்று பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய எதேச்சாதிகார நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா தோற்றம் பெற்ற காலத்திலிருந்து அநேகமான வருடங்களை போரிலேயே கழித்துள்ளது.
யுத்தத்தையே நோக்கமாகக் கொண்ட ஒரு நாட்டை ஏக வல்லரசாக ஏற்றுக்கொண்டு, அதற்குப் பின்னால் செல்லும் கூட்டமும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது."
ஈரானியப் புரட்சியும் தற்போதைய சூழலும்
"1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சி ஏற்பட்ட போது, அதனை இஸ்லாமியப் புரட்சி என்று சொல்வதற்கு ஷீஆ, சுன்னி என்ற பாகுபாடுகளைக் காட்டி சிலர் தயங்கினர். ஆனால், இன்று நடப்பது ஈரான் தொடுத்த போர் அல்ல; அது அந்த நாட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட போர். காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்குலகம் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
இந்த நிலையில், ஈரானின் வெற்றி என்பது சர்வதேச சட்டங்களை மீறும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு சிறந்த படிப்பினையாக அமைய வேண்டும்."
இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்த அதிருப்தி
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்த அவர்,
"ஒரு நட்பு நாடான ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான தாக்குதலைக் கூடப் பகிரங்கமாகத் தார்மீக அடிப்படையில் கண்டிக்க இலங்கைக்குத் திராணி இல்லை. சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்ட இப்படுகொலைகளுக்கு ஒரு கண்டன அறிக்கையோ அல்லது முறையான அனுதாபமோ தெரிவிக்காத ஒரு கேவலமான நிலையில் எமது நாடு இருக்கிறது.
இது போன்ற அடிமைத்தனமான நிலையை எண்ணி நாம் கவலைப்படுகிறோம்." எனத் தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை
இந்த யுத்தச் சூழலால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்துக் குறிப்பிடுகையில், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் அந்நியச் செலாவணி என்பன முன்னேறி வரும் வேளையில், இவ்வாறான மோதல்கள் மீண்டும் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்றார்.
குறிப்பாக எண்ணெய் விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கான உர விநியோகப் பாதிப்பு போன்ற சவால்களை இலங்கை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், ஏனைய மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.