ஈழத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் (PSTA) என்றவற்றுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பெரும் திரளான மக்களின் தன்னெழுச்சியோடு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நன்கு அறிந்த இனமாக அதன் பாதிப்புக்களை முற்றுமுழுதாக அனுபவித்தவர்களாக நாம் இருக்கிறோம். இத்தகைய சூழலில் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவோம் என ஆட்சிப்பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அதனை விட அதிபயங்கரமான சரத்துக்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தினை (PSTA) அமுல்படுத்துவதனை தமிழர்களாகிய எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது.
அந்த வகையில் குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண பொது நூலக முன்றலிலிருந்து வடமாகாண ஆளுநரின் மாளிகை வரை குறித்த பேரணியானது நடைபெற்று, இறுதியாக கண்டன அறிக்கை வாசிப்புடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
போராட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்:
47 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) தக்க வைத்துக் கொள்வதற்காக, அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டத்தை (PSTA) அரசானது கொண்டுவருகிறது. மாறிமாறி வந்த அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அவர்களது எண்ணங்களும் கொள்கைகளும் ஒன்றுதான் என்பதை அனுர அரசும் இப்போது நிரூபித்திருக்கிறது.
தமிழ் மக்களினுடைய அவல நிலைகளை, அவர்களது கடந்தகால போராட்டத்தினுடைய உண்மைத் தன்மைகளை உலகிடமிருந்து மறைப்பதற்காக அவர்களது காணிகளை இன்னும் விடுவிக்காமல், அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்து, அவர்களது நிலப்பரப்புகளில் புத்த விகாரைகளை அமைத்துக் கொண்டு, வன்முறை ரீதியாக நிலங்களைப் பறிக்கும் வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் காட்டிவரும் இந்த சூழ்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக மக்களை அச்சுறுத்தும் அதேவேளை திசைதிருப்பப் பார்க்கிறது.
ஆகவே, “நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினையும் (PTA), புதிதாகக் கொண்டு வரும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினையும் (PSTA) ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களாகிய நாம் கடுமையாக எதிர்க்கிறோம்”, எனக் குறிப்பிட்டார்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
குறித்த பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தவத்திரு வேலன் சுவாமிகள், மதத் தலைவர்கள், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், தாயகச் செயலணியின் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.