மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று (01.03.2026) ஆம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.