யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து பாரிய போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் விசாரணைகளைக் கண்டித்து, இன்று (19.03.2026) பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

​கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக, மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயல் என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

​மாணவர்களின் முக்கிய கோரிக்கைகள்...

​அடக்குமுறையை நிறுத்துக: அநுர குமார திஸாநாயக்கவின் புதிய ஆட்சியிலும் தொடரும் இத்தகைய அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

​ஜனநாயக உரிமை...

பல்கலைக்கழக வளாகத்தினுள் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாது.

​நிர்வாகத் தலையீடு...

மாணவர் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையான பொலிஸ் விசாரணைகளாக மாற்றாமல், பல்கலைக்கழக நிர்வாக மட்டத்திலேயே நிறைவு செய்ய வேண்டும்.

​இன்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தின் ஒரு கட்டமாக பல்கலைக்கழக வாயில்களை மாணவர்கள் மூடியுள்ளனர்.

​"விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எமது சக மாணவர்கள் பாதுகாப்பாகத் திரும்பும் வரை எமது போராட்டம் ஓயாது," என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

​தற்போது மாணவர்கள் விசாரணைக்காகச் சென்றுள்ள நிலையில், அவர்களின் வருகைக்காக ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழக வாயிலில் காத்திருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை