யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வாறான நெருக்கடிகளை நீண்டகால அடிப்படையில் எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்கும் அதேவேளை, பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான குறுகிய கால தீர்வுகளையும் அரசாங்கம் தயாரித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள எரிபொருள் களஞ்சிய வசதிகளுக்கு ஏற்ப, மிகச் சிறந்த எரிபொருள் முகாமைத்துவத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், எரிசக்தித் துறை மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 47 ஆண்டுகளில் எவ்வித மறுசீரமைப்புக்கும் உள்ளாக்கப்படாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 100% இனால் அதிகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கொலொன்னாவையில் புதிதாக 86,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட களஞ்சியத் தொகுதியை நிர்மாணித்தல், முதுராஜவெலவில் நிர்மாணிக்கப்படும் புதிய களஞ்சியத் தொகுதியின் கொள்ளளவை 40,000 மெற்றிக் தொன் வரை அதிகரித்தல்,முதற்கட்டத்தின் கீழ் திருகோணமலையில் 04 எண்ணெய் குதங்களைப் புனரமைத்தல் மற்றும் கடலிலிருந்து குழாய் கட்டமைப்பை அமைத்தல், கொலொன்னாவையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் 90 ஆண்டுகள் பழமையான குழாய் கட்டமைப்பிற்கு பதிலாக 14 அங்குல மற்றும் 18 அங்குல இரு புதிய குழாய் தொகுதிகளை அமைத்தல்,கொலொன்னாவையிலிருந்து களனிதிஸ்ஸ வரை செல்லும் 90 ஆண்டுகள் பழமையான நெப்தா குழாய் கட்டமைப்பைப் புனரமைத்தல் என்பவற்றுக்கு அரசாங்கம் சுமார் 30 பில்லியன் ரூபா செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோல், எரிவாயு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சுற்றுலா, ஏற்றுமதி, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விரிவாக விளக்கினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை.
மத்திய கிழக்கில் தற்பொழுது ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை குறித்தும் இலங்கைக்கு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்படும் தாக்கம் குறித்தும் சில விடயங்களை கூற எதிர்பார்க்கிறேன்.
எந்தவொரு யுத்த மோதலும் எந்தவொரு சமூகத்திற்கும் சாதகமாக அமைவதில்லை. தொழில்நுட்ப மற்றும் யுத்த ரீதியில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்படும் உலகில் அவை எந்தளவு அழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். இந்த யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகத்திற்காக அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டல் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். உலகப் பொருளாதாரத்திற்கும் அன்றாட வாழ்க்கையின் இருப்பிற்கும் இது பாரிய அச்சுறுத்தலையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
இலங்கைக்கு தனியாக அதிலிருந்து மீள முடியாது. நாடென்ற வகையில் அதற்கு திட்டம் வகுக்கும் அதேவேளை இந்த நிலைமைக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கிடையே அமைதியான உலகம் தொடர்பான அர்ப்பணிப்பின் ஊடாக மாத்திரமே தீர்க்க முடியும் என நம்புகிறோம். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையின் காரணமாக துரிதமாக பாதிப்பை ஏற்படுத்தும் பல துறைகள் இருக்கின்றன.
அதில் ஒன்று எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகமாகும். வெளிநாடுகளில் பெருமளவு இலங்கையர்கள் தொழில்புரிகிறார்கள். அவர்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் இரண்டாவதாகும். சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுக் கையிருப்பு என்பன எமது பொருளாதாரத்தில் முக்கிய பகுதிகளாகும். அவற்றுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து கடல் சார்ந்த சேவைகளுக்கு ஏற்படும் பாதிப்பும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதே போன்று விமானச் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பலதுறைகளில் துரிதமாக பாதிப்பை எதிர்கொள்கிறோம். நாடென்ற வகையில் நீண்ட கால அடிப்படையில் இதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்.
குறுகிய கால அடிப்படையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடென்ற வகையில் இந்த நெருக்கடிக்குள் சிக்காது அதிலிருந்து மீள்வது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.
இவ்வாறான நிலைமையில் மக்கள் ஓரளவிற்கு குழப்பமடைவது பொதுவான ஒன்றே. அதற்காக பொதுமக்களுக்கு குற்றம் கூறிப் பயனில்லை. இது தொடர்பில் மக்களுக்கு கசப்பான அனுபவம் உள்ளது. அந்த இறந்த காலம் இன்னும் அவர்களின் மனங்களை குழப்பி வருகிறது. கேஸ் மற்றும் எரிபொருள் இல்லாமல் பல வாரங்கள் வரிசைகளில் இருக்க நேரிட்டதோடு வரிசையில் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறான செய்திகள் மக்களை பீதியில் தள்ளுவது இயற்கையானதே.அதேபோன்று மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வாறு பல துறைகளில் கசப்பான அனுபவங்களுக்கு அல்லது அனர்த்தத்திற்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் முகங்கொடுக்க நேரிட்டது. சிறு சலனத்திற்கும் மக்கள் அச்சமடைகின்றனர்.
எம்மால் தகவல்கள் மற்றும் வாக்கியங்களினால் சமூகத்தை நிலைப்படுத்த முடியாது. நடைமுறைச்சாத்தியமாக அவர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க மாட்டார்கள் என உத்தரவாதம் அளிப்பதன் ஊடாக மாத்திரமே இதனை ஸ்தீரப்படுத்த முடியும்.கடந்த காலத்தில் வெளியான செய்திகளை பாருங்கள். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவை பேச்சாளரும் அரச அலைவரிசைகளும் ஜனாதிபதியும் தெரிவித்த கருத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்களில் பொய்யாகின. அதனால் எப்பொழுதும் இவ்வாறான விடயங்களினால் பீதி அடையும் ஸ்தீரமற்ற நிலை ஏற்படும் சமூகமே காணப்படுகிறது.
பொருளாதாரத்தை இன்னும் பலமான ஸ்தீரமடையச் செய்யவில்லை. பொருளாதாரம் ஸ்தீரப்படுத்தப்பட்டு வருகிறது. எமது கையிருப்புகளை பலப்படுத்தி வருகிறோம்.எமது உற்பத்திகள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறான பல சந்தர்ப்பங்களுக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வலயத்தில் மோதல் தொடர்பில் இதே போன்ற அச்சம் எழுந்தது. குறுகிய காலத்திற்குள் அந்த நிலை சுமூகமடைந்தது.
அமெரிக்கா தமக்கே உரித்தான பொருளாதார மூலோபாயங்களுக்கு அமைவாக பெருமளவு வரியை அதிகரித்தது. இதனால் நாடு அச்சுறுத்தலை எதிகொள்ளும் என பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசப்பட்டது. அதனையும் குறிப்பிட்டளவு சீராக்க முடிந்தது.
அடுத்து டித்வா சூறாவளியினால் பாரிய சேதம் ஏற்பட்டது. மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 4 வீதம் வரை தாக்கம் ஏற்பட்டது. 4.1 பில்லியன் டொலர் அழிவு ஏற்பட்டது.ஆனால் 3 மாத காலத்தினுள் குறிப்பிடத்தக்க அளவு அதனை சீர் செய்து வழமையான நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டு வந்துள்ளோம்.
சவால்களின் போது வெற்றிகரமாக அவற்றை கையாண்ட வரலாற்றை கொண்டிருக்கிறோம். இவற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது எழுந்துள்ள நிலை எதுவரை செல்லும் என்பது எம் அனைவருக்கும் நிச்சயமற்ற ஒன்றாகும்.
அரசாங்கம் என்ற வகையில் நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக கவனத்திற் கொண்டு வருகிறோம். இந்த நிலைமைகளை ஆராய்ந்து பொருளாதாரத்திற்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய வங்கி இன்று மாலை அல்லது நாளை அறிக்கையொன்றை வழங்க இருக்கிறது. நிதி நிலைமைக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் அதன் ஊடாக ஓரளவு கணிக்கலாம்.
அதே போன்று அன்றாட வாழ்க்கையில் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கம் மற்றும் ஏற்படக் கூடிய மோசமான பாதிப்பு தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை தயாரித்து வருகிறது.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிவிவகார அமைச்சு என்பன வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிக்கை தயாரித்து வருகின்றன.
அடுத்து மக்களின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் வசதிகளை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும். நெருக்கடி நிலையில் தனித்தனியாக மீள்வதற்காக மேற்கொள்ளக் கூடிய விடயங்கள் குறைவானவை. தனியாக ஒருவருக்கு வரிசையில் நின்று எரிபொருள் பெற முடியும். ஆனால் முழுமையான நெருக்கடியின் தீர்வு தனித்தனி நபர்களின் கரங்களில் இல்லை. முழுமையான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பிரதான பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் கைவிட முடியாத பொறுப்புள்ளது. எமது நாட்டு பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க பொறுப்புள்ளது. அரசாங்கம், பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் மற்றும் பொதுமக்கள் ஒன்றாக ஒரே நோக்கத்திற்காகவும் திட்டத்திற்காகவும் செயற்பட வேண்டும்.
ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து தனித்தனியாக எடுத்துக் காட்டுகிறேன்.முக்கியமாக எரிபொருள் வரிசைகள் காணப்படுகின்றன. இன்று அறிக்கையொன்றை கோரினேன். ஓரளவு வரிசை குறைந்துள்ளது. நம்பிக்கையை உறுதிப்படுத்தினால் வரிசைகள் மேலும் குறையும்.
எமது களஞ்சியங்களில் இரண்டு மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கும் அளவு கொள்ளளவு கிடையாது. அடுத்த கப்பல் வரும் போது அவற்றை சேமிப்பதற்கு ஏற்றவாறு எமது களஞ்சியங்களை வெறுமையாக்க வேண்டும்.களஞ்சியங்களை நிரப்பி வைக்க முடியாது. திருகோணமலையில் உள்ள IOC களஞ்சியங்கள் தவிர கொலன்னாவையிலும் முதுராஜவலயிலும் உள்ள மொத்த கொள்ளளவு 150 000 மெற்றிக் தொன்களாகும். எமக்கு 150 000 மெற்றிக் தொன் எரிபொருளை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அடுத்த கப்பல் வரும் போது அதன் கொள்ளளவிற்கு ஏற்றவாறு களஞ்சியங்களை காலியாக்க வேண்டும். கப்பல் வருவதற்கு அமைவாக களஞ்சியற்களை வெறுமையாக்கும் திட்டத்துடன் தான் செயற்படுகிறோம்.
150 000 மெற்றிக் தொன் கொள்ளளவில் 103 000 மெற்றிக் தொன் எரிபொருள் களஞ்சியங்களில் நிரம்பியிருந்தன. அதே போன்று நாளாந்த சுந்திகரிப்பின் ஊடாக1800 மெற்றிக் தொன் கிடைக்கிறது. அந்த 1800 மெற்றிக் தொன்னிற்காகவும் களஞ்சிய வசதிகளை தயார் செய்ய வேண்டும். இந்தக் களஞ்சியங்களுக்கு உகந்த வகையிலான திட்டத்தை வகுத்திருந்தோம். எமது களஞ்சிய கட்டமைப்பு சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்டிருந்தது. புள்ளிவிபரங்களை ஆராய்ந்து நாளாந்த தேவைகளை கவனித்து கப்பல்கள் வரும் திகதிகளை அவதானித்து சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியாகும் எரிபொருளின் அளவை கவனித்து தேவையான கொள்ளளவை பேண வேண்டும். களஞ்சியங்களை நிரப்பி வைத்திருக்க முடியாது. நாளாந்தம் சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இவற்றை ஒப்பிட்டே களஞ்சியத் தொகுதி நிர்வகிக்கப்பட்டது.
இதன்படி 33 நாட்களுக்குத் தேவையான டீசல் கையிருப்பு உள்ளது. எமது பெற்றோல் களஞ்சியக் கொள்ளளவு 161 087 மெற்றிக் தொன்களாகும். இந்த நெருக்கடி உருவான போது 136 270 மெற்றிக் தொன் கையிருப்பு இருந்தது. இவற்றை முழுமையாக வைத்திருக்க முடியாது. எம்மிடம் பாதுகாப்பு கையிருப்பு இருந்திருக்குமானால் செயற்பாடுகளுக்கு தனியான களஞ்சியத்தை பேணியிருக்கலாம். ஆனால் எம்மிடம் ஒருபோதும் பாதுகாப்பு கையிருப்பு இருந்ததில்லை. நாளாந்தம் பயன்படுத்தும் களஞ்சியமும் தேவையான கொள்ளளவும் ஒரே கையிருப்பிலே உள்ளன. உலகில் வேறு நாடுகளில் அவசர நிலைமைக்கு தேவையான கையிருப்பு வேறாகவும் நாளந்த நடவடிக்கைகளுக்கான கையிருப்பு தனியாகவும் இருக்கும். ஆனால் எமது நாட்டில் கையிருப்பும் நாளாந்த நடவடிக்கைக்கான களஞ்சியமும் ஒரே இடத்திலே உள்ளன.எனவே சுத்திகரிப்பில் இருந்து கிடைக்கும் அளவு,சந்தைக்கு விநியோகிக்கும் அளவு ,கப்பல் வரும் நாட்கள்,எம்மிடமுள்ள களஞ்சியங்கள் என்பவற்றை சிறப்பாக முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
எந்தவொரு நெருக்கடி நிலையிலும் எமக்கு பேணக்கூடிய அதிகபட்ச அளவை தற்பொழுது களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோம். அதன் படி 33 நாட்களுக்குத் தேவையான டீசல் கையிருப்பு உள்ளது. 27 நாட்களுக்குத் தேவையான பெற்றோல் கையிருப்பு உள்ளது. அதே வேளை 7 அல்லது 8 ஆம் திகதி 35 000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைய இருக்கிறது.அதனுடன் சேர்த்து சுமார் 40 நாட்களுக்குத் தேவையான பெற்றோல் கையிருப்பு உள்ளது. எமக்கு விரும்பியவாறு கப்பல்களை எடுத்து வர முடியாது.
களஞ்சியங்கள் வெற்றிடமாகும் அளவுக்கு ஏற்பத்தான் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட வேண்டும். நாளாந்தம் எந்தளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என எமக்குத் தெரியும். 20 நாட்களில் எந்தளவு இருக்கும் என அவதானித்து 20 நாட்களில் கப்பல் வரும். விஞ்ஞான ரீதியாக களஞ்சிய தொகுதியை முகாமைத்துவம் செய்து வருகிறோம். 40 நாட்களுக்குத் தேவையான பெற்றோல் உள்ளது.
விமான எரிபொருளுக்கான தினசரி தேவை சுமார் 1,800 மெற்றிக் தொன்களாகும். எமது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினமும் 1,680 மெற்றிக் தொன் உற்பத்தி செய்கிறோம். மொத்தத் தேவை 1800 ஆகும். எஞ்சிய தொகை தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் அடுத்த 49 நாட்களுக்குப் போதுமானதாக உள்ளது.
களஞ்சியங்கள் காலியாகும் போது அவற்றை நிரப்பத் தேவையான
கப்பல்களின் வருகை அட்டவணையும் உள்ளது. 49 நாட்களுக்குத் தேவையானவை தீர்ந்ததும் அடுத்த கொள்ளளவை எடுத்து வந்து நிரப்புவதில்லை. கப்பல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன
RM Parks நிறுவன கப்பல் 14-ஆம் திகதி வர உள்ளது.Sinopec நிறுவன கப்பல் 17-ஆம் திகதி வருகிறது.IOC நிறுவன கப்பல் 21-ஆம் திகதி வருகிறது. எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலமாக 28-ஆம் திகதி ஒரு கப்பல் வரவுள்ளது.
இவை அனைத்திலும் எரிபொருள் ஏற்றப்பட்டுள்ளன. அவை அதனை உறுதிப்படுத்தியுள்ளன. கப்பல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. களஞ்சியங்கள் நிரப்பப்பட்டுள்ளன.எனவே, தற்போதைய நிலையில் நாட்டில் எந்தவித எரிபொருள் நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பில்லை.
எரிபொருள் சுத்திகரிப்பிற்கு மசகு எண்ணெய் அவசியம். 26 நாட்களுக்குப் போதுமான மசகு எண்ணைய் கைவசமுள்ளது. மற்றொரு கப்பல் 18 நாட்களுக்கான மசகு எண்ணைய்யுடன் வருகிறது. அந்தக் கப்பல் வந்து கொண்டிருக்கிறது. எந்த கப்பலும் வராவிட்டாலும் 44 நாட்களுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு மேற்கொள்ள முடியும். பெற்றோல்,டீசல், விமான எரிபொருளுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் எந்தவொரு நெருக்கடியும் ஏற்படாது.
ஒருவேளை யுத்தம் தீவிரமடைந்தால் அது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்.அதனை நாம் முடிவு செய்யவதில்லை. நெருக்கடி அதிகரிப்பதற்கு அமைவாக நாம் திட்டம் வகுப்போம். எரிபொருள் கொள்ளளவு தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக நீடிக்கிறது.
கொலன்னாவையில் மேலதிகமாக 86,000 மெற்றிக் தொன் சேமிப்புக் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிதாக 6 குதங்கள் அமைக்கப்படும். மொத்மாக 8 குதங்கள் அமைக்கப்படும். 2027 ஆம் ஆண்டில் அவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். 6 குதங்களுக்கு 3.2 பில்லியன் ரூபா செலவாகும். அடுத்த இரண்டிற்கு 1.45 பில்லியன்களாகும். கொலன்னாவையில் மாத்திரம் சுமார் 5 பில்லியன் ரூபா செலவில் களஞ்சிய வசதியை அதிகரிக்கிறோம். 10 நாட்களுக்கான கொள்ளளவு இதன் ஊடாக அதிகரிக்கிறது. 8600 வரை தான் எமது நாளாந்த தேவையாக உள்ளது. அடிக்கல் நாட்டப்பட்டு ஒப்பந்தம் கையளிக்கப்பட்டுள்ளது. 2027 ஜனவரியில் இதனை ஒப்படைக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.
அடுத்ததாக முதுராஜவெல பற்றிப் பார்த்தால், அங்கு புதிதாக 40,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட ஒரு நவீன களஞ்சியத்தை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதற்கு சுமார் 3.5 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதுராஜவெல 40,000 மெற்றிக் தொன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் இந்த டெண்டரை எம்மால் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல், முதுராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் எடுத்துச் செல்வதற்கு ஒரு புதிய எரிபொருள் குழாய் கட்டமைப்பை அமைக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். விமான நிலையத்தில் பாரியதொரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான போக்குவரத்து மையமாக மாற்ற முடியும். குறிப்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகளில் அது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சரக்கு போக்குவரத்து மையமாக மாற்ற முடியும். இதனோடு விமான நிலையத்தில் எரிபொருள் கேள்வி உயரும்.
தற்போது விமான எரிபொருளுக்கான தேவை நாளொன்றுக்கு 1,800 மெற்றிக் தொன்னாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும். எனவே, விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் மற்றும் விமான மையமாக மாற்றும் திட்டம் மற்றும் அதற்கு ஏற்றவாறு எரிபொருள் விநியோகத் திட்டமும் தயார் செய்ய வேண்டும். விமான நிலையத்தை தயார் செய்து விமானங்களை அதிகரித்து எரிபொருள் விநியோகம் குறித்து சிந்தித்துப் பயனில்லை. நாம் இரண்டையும் சமமாக முன்னெடுக்கிறோம்.
எனவே முதுராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடியாகக் குழாய் அமைத்து வருகிறோம். அதே போன்று விமான எரிபொருள் திறனை 63,000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கும் திட்டத்தையும் நாம் முன்னெடுத்துள்ளோம். இதற்கான டெண்டர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதற்காக சுமார் 16 பில்லியன் ரூபா செலவாகும். இவை தான் அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளாகும். இந்த 63 000 ஊடாக தற்போதைய கேள்விக்கு அமைவாக 40 நாட்களுக்குத் தேவையான விமான எரிபொருளை களஞ்சியப்படுத்த முடியும்.
இதற்கான சந்தைப்படுத்தல் திட்டம் தயாரிக்கப்பட்டு சில தனியார் நிறுவனங்களுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. சிறந்த எரிபொருள் விநியோக மையமாக இதனை அமைக்க முடியும். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். சில நிறுவனங்கள் காலஅவகாசம் கோரியுள்ளன. 3 வாரங்களில் டெண்டர் நடவடிக்கை நிறைவு செய்யப்படும்.
திருகோணமலையில் உள்ள முனையங்களுக்கு என்ன நடந்ததென்று பரந்தளவில் பேசப்படுகிறது. அங்கு 24 எரிபொருள் தாங்கிகள் உள்ளன. கடந்த அரசாங்கம் அவற்றில் 3 தாங்கிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. 21 தாங்கிகள் எம்மிடம் உள்ளன. ஒரு தாங்கியின் கொள்ளளவு 10,000 மெற்றிக் தொன்களாகும். அதாவது மொத்தம் 2,10,000 மெற்றிக் தொன் எரிபொருளை சேமிக்க முடியும்.
இதற்காக ஒரே தடவையில் செலவிட முடியாது. பல கட்டங்களாக தாங்கிகளைப் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக 4 தாங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 2 தாங்கிகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த இரண்டும் புனரமைக்கப்படும். இவற்றை புனரமைத்தாலும் குழாய் கட்டமைப்பு இன்றி பயனில்லை. கடலிலிருந்து திருகோணமலையிலுள்ள தாங்கிகளுக்கு எரிபொருளைக் கொண்டு வருவதற்கான பழைய குழாய் கட்டமைப்பு உள்ளது. அவை மிகவும் சேதமடைந்துள்ளன.புதிய குழாய் கட்டமைப்பிற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கு 7.37 பில்லியன் ரூபா செலவாகும். இங்கு 40 000 மெற்றிக் தொன் கொள்ளளவு கிடைக்கும்.
கப்பலில் எரிபொருள் கொண்டு வரப்பட்ட பின்னர் அவற்றை நிரப்புவதற்கான வசதி குறைவாகவே உள்ளது. அதனை மேம்படுத்த வேண்டும். அதனை தானியங்க முறைக்கு மாற்ற இருக்கிறோம். இதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளது. இதற்காக 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கப்பல்கள் வரும்போது அவற்றை இறக்குவதற்கு தற்போது 5 நாட்கள் வரை ஆகிறது. இதை 2 நாட்களாகக் குறைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இன்றேல் பெருமளவு தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும். யுத்த காலத்தில் எரிபொருளை ஒருநாள் இறக்கி விட்டு மீண்டும் கப்பலை நடுக்கடலுக்கு அனுப்ப வேண்டும். இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இந்த முழுக் கட்டமைப்பையும் தானியங்க முறைக்கு மாற்றுவோம். 1.5 பில்லியன் ரூபாவுக்கான விலை மனு கோரப்பட்டுள்ளது.
அடுத்து எரிபொருள் சுத்திகரிப்பு தொடர்பான விடயம்.எமது எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது 38,000 மெற்றிக் தொன் தேவையைக் கருத்தில் கொண்டே அது அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு இதன் கொள்ளளவு மேலும் 12,000 மெற்றிக் தொன்னால் அதிகரிக்கப்பட்டது. 1969 இல் மொத்த கொள்ளளவு 50,000 மெற்றிக் தொன்னாக மாற்றப்பட்டது. கடந்த 47 ஆண்டுகளில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு ஒரு மெற்றிக் தொன்னால் கூட அதிகரிக்கப்படவில்லை.
தற்போது இந்த 50,000 மெற்றிக் தொன் கொள்ளளவை 1,00,000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். 15 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பின்னர் சிறிது கால அவகாசம் கோரப்பட்டது. தற்பொழுது 20 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. எவ்வாறான மாதிரியில் அமைப்பதென பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அரசாங்கமும் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு தனியார் துறையுடன் இணைந்து கொள்ளளவை அதிகரிக்க திட்டம் தயாரித்துள்ளோம். கொள்ளளவை 100 வீதத்தினால் அதிகரிப்போம்.
எரிபொருள் குழாய் கட்டமைப்பு தொடர்பான பிரச்சினையை அனைவரும் அறிவோம். கொலன்னாவ முதல் கொழும்பு துறைமுகம் வரையான எரிபொருள் குழாய்கள் சுமார் 90 ஆண்டுகள் பழமையானவை. இதில் அடிக்கடி கசிவுகள், தீ விபத்துகள் மற்றும் எரிபொருள் திருட்டுகள் நடைபெறுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக இதனைச் சீரமைக்க முயற்சிகள் நடந்தும் அது பலனளிக்கவில்லை. தற்போது 14 அங்குலம் மற்றும் 18 அங்குலம் கொண்ட இரண்டு புதிய குழாய்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனைத்து அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் விலைமனு கோரப்படும். இதற்காக 12.8 பில்லியன் ரூபா செலவிடப்படும்.
அதேபோல் கொலன்னாவ முதல் களனிதிஸ்ஸ வரையான நெப்தா கொண்டு செல்லும் குழாய்களும் 90 ஆண்டுகள் பழமையானவை. இதேபோன்ற பிரச்சினை இங்கும் உருவானது. அண்மையில் இருவர் அங்கு காயமடைந்தார்கள். இவை பாதுகாப்பற்றவை.விரைவில் விலைமனு கோர இருக்கிறோம். இது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக 1.5 பில்லியன் ரூபா செலவாகும். மொத்தமாக சுமார் 30 பில்லியன் ரூபா செலவில் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இவையல்லவா அரசாங்கம் செய்ய வேண்டியவை.
எந்தவிதமான நெருக்கடிக்கும் முகங்கொடுக்கும் வகையில் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியும் என நம்புகிறோம். மீண்டும் இவ்வாறான நெருக்கடி எழாமல் மக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் இதற்கு முகங்கொடுக்க முடியும்.எனவே நாம் இரு வகைகளிலும் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறான நிலைமைகளை நாம் முடிவுசெய்வதில்லை.எமது கொள்ளளவிற்குத் தான் நாம் திட்டங்களை வகுக்கிறோம்.எமது இயலுமைக்கு அமையவே திட்டமிடுகிறோம். எமது இயலுமைக்கு தாக்குப் பிடிக்க முடியாதவாறான நிலைமைகள் எழலாம். அதனை ஏற்கிறோம். அரசாங்கத்திற்கும் எதிரணிக்கும் இடையிலான மோதல் எனின் கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திற்கு செயற்படலாம். நீங்கள் 27-2 இன் கீழ் கேள்வி எழுப்புவீர்கள். நாங்கள் பதிலளிப்போம். இது அவ்வாறான நிலைமை அல்ல. நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்து வருகிறோம். எரிபொருள் விநியோகம் தொடர்பில் எம்மிடம் திட்டம் உள்ளது.
அடுத்து எரிவாயு தொடர்பான பிரச்சினையாகும் எரிவாயுவைப் பொறுத்தவரை நாட்டின் மொத்த கொள்ளளவு 8,000 மெற்றிக் தொன் மட்டுமே. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தினசரி தேவை 1,000 முதல் 1,200 மெற்றிக் தொன்களாகும். உச்சபட்சம் ஒரு வாரத்திற்குத் தேவையான எரிவாயுவை மட்டுமே எம்மால் சேமிக்க முடியும். இரண்டு நாளைக்கு ஒருதடவை துறைமுகத்திற்கு கப்பல் தருவிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
தனியார் எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் பாதிக்கப்பட்டபோது, எமது தினசரி தேவை 1,800 மெற்றிக் தொன்னாக அதிகரித்தது. ஆனால் 8,000 மெற்றிக் தொன்களே எமது கொள்ளளவாக இருந்தது. தனியார் நிறுவன விநியோகம் தடைப்பட்டதால் நாளாந்த விநியோகம் 1 800 வரை அதிகரித்தது.
கொள்ளளவு 8000 ஆக இருக்கையில் பிரச்சனை என்னவென்று உணரலாம். 5 நாட்களுக்குக் கூட எரிவாயுவை களஞ்சியப்படுத்த முடியாது. தற்போது மாலைதீவில் ஒரு கப்பலை நிறுத்தி வைத்து, அங்கிருந்து சிறிய கப்பல்கள் மூலம் 8,000 மெற்றிக் தொன் வீதம் எரிவாயு எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு தான் நாட்டின் நிலைமை உள்ளது. எரிபொருள் நிறுவன கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.
தனியார் நிறுவனத்திடம் 3 0 000 மெற்றிக் தொன் கொள்ளளவுள்ள முனையம் உள்ளது. ஏற்றுமதிச் சந்தைக்காகவே அவர்கள் அதனை உருவாக்கினார்கள். அவசர நிலைமையில் அவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். 30 000 மெற்றிக் தொன் கொள்ளளவில் 15 000 கொள்ளளளவு வசதியை எமக்கு வழங்குமாறு கோரியுள்ளோம். அவசர நிலைமையில் 15 000 கொள்ளளவு வசதியை வழங்க அவர்கள் உடன்பட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அது முதலீட்டுச் சபை ஊடாக உருவாக்கப்பட்டதால் உள்நாட்டு சந்தைக்கு எரிபொருள் விநியோகிப்பதானால் உரிய வரி செலுத்த வேண்டும். தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் எரிபொருளில் 20% தான் உள்ளுர் சந்தைக்கு வழங்க வேண்டும். கடந்த காலத்தில் அவர்களின் ஏற்றுமதிச் சந்தை முழுமயாக வீழ்ச்சியடைந்தது. பங்களாதேச மோதலினால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்றுமதி விநியோகம் வீழ்ச்சியடைந்த போதும் உள்நாட்டு சந்தைக்கு அதனை விநியோகிக்க முடியவில்லை.நிறுவனம் என்ற வகையில் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த நிறுவனத்தில் மஞ்சள் நிற எரிவாயு பெற்ற பாவனையாளர்கள் இருந்தனர்.மஞ்சள் சிலிண்டர் உள்ளவர்களுக்கு எரிவாயு கிடைக்கவில்லை. நிறுவனத்திற்கு 20 வீதம் மட்டுமே சந்தைக்கு எரிவாயு விநியோகிக்க முடியும். ஏற்றுமதி செய்தால் மாத்திரமே 20 வீதத்தை விநியோகிக்க முடியும். இவ்வாறு தான் சிக்கல் உருவானது.
அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தின் ஊடாக விசேட ஒழுங்குமுறை ஊடாக உள்நாட்டு சந்தைக்கு தற்காலிகமாக விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து வரிகளும் அறவிடப்பட்டன. அவர்களின் ஏற்றுமதிச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த ஒப்பந்தத்தின் படி இங்கு மஞ்சள் எரிவாயு கிடைக்காமல் போயிருக்கும்.
இங்கு எந்தவித மோசடியான ஒப்பந்தமும் கிடையாது. 20 வீத மஞ்சள் எரிவாயு பாவனையாளர்கள் உள்ளனர். ஆனால் 20 வீதம் எரிவாயு வழங்க முடியாத நிலைமை இருந்தது. முதலீட்டுச் சபையின் கீழ் வரும் நிறுவனமாக இருந்தாலும் அனைத்து வரியையும் செலுத்தி உள்நாட்டு சந்தைக்கு 20 வீதத்திற்கும் மேல் சமையல் எரிவாயு வழங்க முடியும். தற்காலிகமாக இந்த வாய்ப்பை வழங்க உத்தேசித்துள்ளோம்.
100 000 லிட்ரோ கேஸ் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 12 ஆம் திகதி கப்பல் நாட்டை அடைகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டினால் மஞ்சள் சிலிண்டரில் இருந்து நீல சிலிண்டருக்கு மாற பாவனையாளர்கள் விரும்பினர். நாம் விலைகளை அதிகரிக்கவில்லை. கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கோசம் எழுப்பினாலும் கேஸ் தட்டுப்பாடு எழவில்லை. நெருக்கடியை உணர வேண்டும். 8000 கொள்ளளவு இருக்கையில் ஒரேயடியாக 1800 மெற்றிக் தொன் கேள்வி எழும் போது நெருக்கடி எழலாம். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எரிபொருள் மற்றும் கேஸ் தொடர்பில் நெருக்கடி ஏற்பட குறைந்தளவு வாய்ப்புகளே உள்ளன.
குறிப்பாக மோதல் நிலவும் பகுதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்த சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் உள்ளனர்.பதியாமல் இருப்பவர்களும் உள்ளனர். அவசர நிலைமையில் இவர்களை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
தற்பொழுது நாம் அனைத்து தூதரகங்களிலும் 24 மணிநேர அவசத இலக்க(Hotline) சேவை ஆரம்பித்துள்ளோம்.தமது பிரச்சினையை 24 மணிநேரமும் அறிவிக்க முடியும்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலும் ஆகியவற்றிலும் 24 மணிநேரமும் செயற்படும் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சிலும் அவ்வாறான சேவை அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் குறித்து ஏதேனும் அச்சம் அல்லது சிக்கல்கள் இருந்தால், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உடனடியாக வெளிவிவகார அமைச்சு அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்க முடியும்.
தூதரகங்களின் ஊடாக எமக்கு தலையீடு செய்ய முடியும். தூதரகங்களுக்கும் அந்த நாடுகளிலுள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்தித்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தால் இராஜதந்திர உறவுகளின் ஊடாக ஒத்துழைப்பை எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.
மார்ச் மாதத்தில் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவ வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் குறிப்பிட்டளவு சுற்றுலா பயணிகள் உள்ளனர்.அவர்களின் விசா காலம் முடிவடைந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு இலவச விசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேரடி யுத்தம் நிலவும் நாடுகளில் உள்ள எமது ஏற்றுமதி சந்தைகளின் வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருகிறோம். குறிப்பாக, டொலர் கையிருப்பு மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தைப் பாதுகாப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், குறுகிய கால நெருக்கடிகளைத் தணிக்கவும் தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.இந்த நோக்கை அடைவதற்காக அமைச்சுகளும் அரச அதிகாரிகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அரச பொறிமுறை முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.இதற்குத் தேவையான அரசியல் ரீதியான ஆதரவை வழங்குவதே எமது பொறுப்பாகும்.
இந்த இக்கட்டான நிலைமை மிகக் குறுகிய காலத்தில் சீராகும் என நாம் பிரார்த்திக்கிறோம்.நாம் சாதகமான நிலையை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-03-03