மட்டக்களப்பில் தொடர் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள்.. திடுக்கிடும் பின்னணி - சந்தேக நபர்கள் கைது!

​கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்த திட்டமிட்ட கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கிழக்கு மாகாண குற்றப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
​திட்டமிட்ட தொடர் குற்றங்கள்..
அம்பலமான உண்மைகள்
​பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த கும்பல் மூன்று பிரதான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


​பெப்ரவரி 05, 2026

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து வயோதிபப் பெண் ஒருவரை இலக்கு வைத்த இக்கும்பல், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

​பெப்ரவரி 28, 2026

பட்டிருப்பு பாலத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெண் ஒருவருக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்தப் பெண்ணின் நகைகளைப் பறித்துக்கொண்டு, மாலை 3.30 மணியளவில் நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அவரை வீசியுள்ளனர்.

குறித்த பெண் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

​மார்ச் 19, 2026

மற்றுமொரு பெண் கடத்தப்பட்டு, அவருக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.

இரக்கமற்ற முறையில் அப் பெண்ணின் குழந்தையை வயல் பகுதியில் வீசிவிட்டு, இரவு 9.00 மணியளவில் பெண்ணை நெல்லிக்காடு கிணற்றில் வீசியுள்ளனர். 

அப் பெண் தற்போது குற்றுயிராக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​பொலிஸாரின் நடவடிக்கை
​கிழக்கு மாகாண குற்றப் பிரிவினர் மேற்கொண்ட துரித விசாரணைகளின் மூலம், சிசிரிவி (CCTV) காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

​இந்தச் சம்பவங்கள் மட்டக்களப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அறிமுகமில்லாத நபர்களிடம் எவ்வித உணவுகளையோ அல்லது வாகன வசதிகளையோ பெற்றுக்கொள்ள வேண்டாம் எனப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை