​வெல்லாவெளி பொலிஸார் அதிரடி - இரு பெண்கள் உட்பட 11 பேர் புதையல் தோண்டிய போது கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி, திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டப்படுவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) அதிகாலை 5:00 மணியளவில் வெல்லாவெளி பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

​பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
இதன்போது புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை மற்றும் திக்கோடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து புதையல் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதிநவீன ஸ்கானர் இயந்திரம் மற்றும் அவர்கள் பயணித்த வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை