தரம் 3 மாணவர்களை பழிதீர்க்கும் ஆசிரியர்- பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா?

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட படுவான்கரை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், தரம் 3 இல் கல்வி பயிலும் சிறுவர்களைக் கொண்டு பலவந்தமாக வகுப்பறையைத் தூய்மைப்படுத்திய சம்பவம் இன்று (22.04.2026) பதிவாகியுள்ளது.

​சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது.


குறித்த பாடசாலை வகுப்பறையை ஒழுங்குபடுத்துவதற்காக இன்று பெற்றோர்கள் வருகை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்கள் வராததைக் காரணங்காட்டி, "உங்களுடைய அம்மாக்கள் வரவில்லை, எனவே நீங்களே வகுப்பறையைக் கூட்ட வேண்டும்" எனக் கூறி தரம் 3 இல் பயிலும் சிறுவர்களைக் கொண்டு வகுப்பறையைத் தூய்மைப்படுத்த வைத்துள்ளார்.

​பெற்றோர்கள் சமூகமளிக்காத கோபத்தை ஒன்பது வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மீது காட்டியுள்ளமை மற்றும் அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபடுத்தியமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​பெற்றோர்களின் ஆதங்கம்.

"சில பாடசாலைகளில் ஆசிரியர்களே முன்மாதிரியாக நின்று வகுப்பறைகளையும் சூழலையும் தூய்மைப்படுத்தும் நிலையில், எமது பகுதியில் உள்ள சில ஆசிரியர்கள் மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது.

ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியரே, பிஞ்சுக் குழந்தைகளைத் தண்டிப்பது போன்று வேலை வாங்குவது முறையற்றது" எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

​நடவடிக்கைக்கான கோரிக்கை..!

பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி தற்போது பாடசாலையின் பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், தேவைப்படும் பட்சத்தில் உரிய ஆதாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​எனவே, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டபூர்வமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை