வீரமுனை சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் நிறைவேறியது.!

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (12.04.2026) ஞாயிற்றுக்கிழமை பக்திப் பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்ப நிகழ்வுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகின. 
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (10.04.2026) மற்றும் சனிக்கிழமை (11.04.2026) ஆகிய தினங்களில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

நேற்று காலை கும்பாபிஷேகப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, சுப வேளையில் சுமார் 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. 

கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஆரோகரா" கோஷத்துடன் வழிபட்டனர்.

இந்நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிள்ளையாரின் அருளைப் பெற்றனர்.

​சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக நடைபெற்ற இப்புனித நிகழ்வு, வீரமுனை கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை