மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் - கோடி ரூபாய் மோசடி பொலிஸார் விசாரணை தீவிரம்.!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தனியார் தங்க ஆபரண அடகு நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், சுமார் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 17 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (24.04.2026) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

அன்றைய தினம் முகாமையாளர் தனது நிறுவனக் கணக்காளரிடம் சென்று, "வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அடகு வைத்த நகைகளைப் பார்வையிட வருகிறார்" எனக் கூறி, பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து நகைகளை எடுத்துத் தனது மேசையில் வைத்துள்ளார்.


அதேவேளை, கொழும்புத் தலைமையகத்திலிருந்து வங்கி வைப்பிலிடக் கோரிய 17 இலட்சம் ரூபாய் பணத்தையும், தானே வங்கியில் செலுத்துவதாகக் கூறி கணக்காளரிடமிருந்து பெற்றுள்ளார்.

நகைகளைக் காட்டிவிட்டு வருவதாகக் கூறி, அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் அலுவலகத்திலிருந்து வெளியேறிய முகாமையாளர், மீண்டும் அலுவலகம் திரும்பவில்லை.

மாலை வரை அவர் வராததையடுத்து, ஊழியர்கள் அவரது கைபேசிக்குத் தொடர்பு கொள்ள முயன்றபோது அது அணைக்கப்பட்டிருந்தது.

இதன்போதே அவர் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

திருடப்பட்டவற்றின் விபரம்: தங்க ஆபரணங்கள்: ரூ. 1,57,00,000 (ஒரு கோடியே 57 இலட்சம்) ரொக்கப் பணம்: ரூ. 17,00,000 (17 இலட்சம்) இது குறித்து அந்த நிறுவனத்தின் கணக்காளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தப்பியோடிய முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதியது பழையவை