மட்டக்களப்பு மண்முனையில் சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்ட முற்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட9 பேருக்கும் தொடர்ந்து 20 வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் (10.04.2026) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 31 ம் திகதி இரவு மண்முணை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட, பொன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 9 பேருடன் பொலன்னறுவையைச் சோந்த 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேரை கைது செய்ததுடன் பூஜை பொருட்களை மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி வழக்கு தாக்கல் செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது கைது செய்யப்பட்ட சிறுவன் பொலன்னறுவைச் சேர்ந்தவர் எனவும் இவர் 3 தலைமுறையாக முதல் ஆண்பிள்ளை எனவும் ஜாதகப்படி 3 நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறந்தவர் எனவும் இவரை பலிகொடுத்து புதையல் தோண்டுவதற்கு அழைத்துவரப்பட்டாகவும் சிறுவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முன்வைத்தார்.
அதேவேளை புதையல் தோண்டுவதில் ஈடுபட்டவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சிறுவன் புதையல் நிலத்தில் எங்கு இருக்கின்றது என சரியாக மை போட்டு பார்க்கும் திறண் கொண்ட மந்திரவாதி என வாதங்களை முனைவைத்ததையடுத்து நீதவான் சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் ஏனையவர்களை கடந்த 10 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றில் வெள்ளிக்கிழமை 10 ம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டதையடுத்து தொடரந்து சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் ஏனையவர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 வரை விளக்கமறயலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதேசம் வரலாற்று ரீதியாக கடந்த ஆயிரம் வருடத்துக்கு முன்னர் சோழமன்னன் குலத்தைச் சோந்த நாச்சியார் மட்டக்களப்பின் நகரமாக மண்முணையை மையமாக வைத்து நெல்லிக்குளம் எனும் குளத்தை கட்டி ஆண்டு வந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் பல பகுதிகளில் தொல்லியல் பொருட்கள் புதையுண்டு உள்ளது இதனை தோண்டி எடுத்து தமிழ் மன்னனான சோழர் மன்னனின் வரலாற்று சுவடுகளை அழிக்கும் முகமாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதையல் தோண்டுவதற்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.