தமிழர் வரலாற்றில் புதிய மகுடம் - சாதனை மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார் சிறீதரன் எம்.பி!

​கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ள மாணவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று(01.04.2026) நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகியோரை கௌரவிக்கும் முகமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

​கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு இன்றைய தினம் நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், மாணவர்களின் திறமையைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்

"வளங்கள் குறைவாக உள்ள மாவட்டம் என்று பலராலும் விமர்சிக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இன்று அகில இலங்கை ரீதியில் ஒரு மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.

இது மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். எம் மண்ணின் கல்வி அடையாளத்தை உலகிற்கு பறைசாற்றிய இந்த மாணவர்களின் வெற்றி, ஏனைய மாணவர்களுக்கும் ஒரு பெரும் ஊக்கமாகும்," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

​இந்தச் சந்திப்பின் போது மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் இந்த அரிய சாதனைக்காக உழைத்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
புதியது பழையவை