தனுஷ்கோடி - தலைமன்னார் கடலில் நீந்தி சாதனை படைத்த - மாற்றுதிறனாளிகள்.!

சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நால்வர், 18 மணி நேரம் பாக்கு நீரிணையில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சி நேற்றுமுன்தினம் (18.04.2026) ஆரம்பமாகி, இன்று (19.04.2026) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் பலரும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (09), குஷ் (09) மற்றும் தன்வேஷ் (10) ஆகியோர் யாதவி விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டரில் நீச்சல் பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தி சென்று, மீண்டும் தனுஷ்கோடிக்கு திரும்பும் முயற்சிக்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (18) தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிற்பகல் 3.25 மணியளவில் நால்வரும் ரிலே முறையில் நீந்தத் தொடங்கினர்.

சுமாராக 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்களில் கடந்து, இரவு 12.30 மணிக்கு தலைமன்னாரை அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, நேற்று (19) காலை 9.27 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை சென்றடைந்தனர்.

இந்த சாதனையின் போது, மொத்தம் 34 கடல் மைல் தொலைவை 18 மணி 02 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளாலும் கடலில் நீண்ட தூரமும் நீண்ட நேரமும் நீந்த முடியும் என்பதை அவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் அஷ்வத், லவ், குஷ், தன்வேஷ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை