திருகோணமலை, தக்ஷிண கயிலாயம் என அழைக்கப்படும் திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா இன்று (04.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நன்னாளானது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உபயமாக அமைந்திருந்ததுடன், மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் இதன்போது கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
இன்றைய விசேட பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரமுகர்களான
ஞா. சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
வைத்தியர் இ. சிறிநாத் (நாடாளுமன்ற உறுப்பினர்)
சீனித்தம்பி யோகேஸ்வரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
அவர்கள் ஆலய நிருவாகத்தினருடனும், மக்களுடனும் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், உற்சவ நிகழ்வுகளையும் சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த உற்சவத்தில், விசேட அபிஷேக ஆராதனைகளும், சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவும் இடம்பெற்றன.
பக்தர்களின் "அரோகரா" கோஷங்களுக்கு மத்தியில், திருக்கோணஸ்வரப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களுக்குமிடையிலான ஆன்மீக மற்றும் கலாசார பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய உற்சவம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.