மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 60-வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் சைக்கிளோட்டப் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் வாசுராஸ் சுஜிந்தன் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இன்று (18.04.2026) சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்ற இப்போட்டி, மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி நகரில் ஆரம்பமானது.
அங்கிருந்து பெரியகல்லாறு வரை சென்று, மீண்டும் மட்டக்களப்பு நகர் ஊடாகத் திரும்பி களுவாஞ்சிகுடி நகரை வந்தடைந்தது.
சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சாந்தை பிரதேசத்தைச் சேர்ந்த வாசுராஸ் சுஜிந்தன் ஏனைய வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி, மிக விரைவாக இலக்கை அடைந்து முதலிடத்தைச் சுவீகரித்தார்.
வெற்றி பெற்ற வீரர் சுஜிந்தனுக்கும், விளையாட்டுத் துறையில் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து வைர விழா கொண்டாடும் நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கும் பிரதேச விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.