தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தினை நினைவு கூரும் முகமாகவும், அவரின் தியாகத்தினை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாகவும் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அன்னை பூபதியின் திருவுருவப்படம் ஏந்திய வாகன பேரணி 11ஆம் நாளான இன்று (19.04.2026)அன்னை உண்ணாவிரதம் ஆரம்பித்த மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகைதந்ததுடன் அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நினைவேந்தலின் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (19.04.2026) மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் நடைபெற்றது.
இதன்போது அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள் குடும்ப உறவுகளால் முன்னெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அன்னை பூபதிக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அன்னையின் இளைய மகள் ராதா அவர்களினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், அன்னையின் மூத்தமகள் சாந்தி அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களினால் சுடரேற்றி, மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், தாயக செயலணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் இருதயம் செல்வகுமார் மற்றும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், அன்னை பூபதியின் குடும்ப உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.