மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக, இன்று(19.04.2026) (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சித்தாண்டியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதான வீதி வழியாகப் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது, போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகக் கடும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
"போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்!"
"சட்டத்தரணிகளே! போதைப்பொருள் வியாபாரிகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாதீர்கள்!"
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் நேரில் வருகை தந்தார்.
அவரிடம் போராட்டக்காரர்களால் விரிவான மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக உடனடித் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சித்தாண்டி மக்களின் இந்தக் குமுறலை ஓங்கி ஒலிப்பதோடு, சட்டவிரோதப் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் குரல் கொடுப்பேன்,என உறுதியளித்தார்.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுடன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.