மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை எங்கள் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த வளத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம், முதன்மையாக வாழைச்சேனை மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அதை விட்டு, கொழும்பில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்காக இந்த வளங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று(29.04.2026)கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் சு. சுதாகரன் மற்றும் சபை செயலாளர் உள்ளிட்டோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயத்தை வலியுறுத்தினேன்.
பாசிக்குடா பகுதியில் இயங்கும் 17 சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் பல ஆண்டுகளாக செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது மிகவும் கவலைக்குரியது. இதன் காரணமாக, சபைக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் இதுவரை பெறப்படவில்லை.
மேலும், கடந்த காலங்களில் சபையை நிர்வகித்தவர்கள் இந்த நிலையை கண்காணிக்கத் தவறியிருந்தார்களா அல்லது இவ்விடயங்களில் தொடர்புடையவர்களாக இருந்தார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
இத்துடன், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுற்றுலா பணியகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பல மாதங்கள் கடந்தும் அதற்கான பதில் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
பாசிக்குடா கடற்கரை மட்டக்களப்பிற்கு கிடைத்த மிக முக்கியமான சுற்றுலா வளமாகும். இதன் மூலம் அதிகபட்ச நன்மை வாழைச்சேனை மக்களுக்கு கிடைக்க வேண்டும். வெளிநகர ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டும் லாபம் ஈட்டும் நிலையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், தேவையான அனுமதியின்றி இயங்கும் சில ஹோட்டல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றிடமிருந்து நிலுவையில் உள்ள வரி தொகைகளை வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருமானத்தை பயன்படுத்தி வாழைச்சேனை பிரதேசத்தின் முழுமையான அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுக்க உறுதியாக உள்ளோம்.
இந்த கலந்துரையாடல், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பிரதி தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.