திருகோணமலை விகாரை விவகாரம் - மனு விசாரணை நிறைவு.!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று (28.04.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது.

குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலையின் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

ரிட் மனு மீதான விசாரணை
தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது முன்னிலையான அரச சட்டத்தரணி, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதிப் பத்திரத்திற்கு இணங்க, குறித்த கட்டிடத்தின் சட்டவிரோதக் கட்டுமானங்களை மனுதாரரான தேரர் அகற்றியுள்ளதால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே, எதிர்மனுதாரர் தரப்பின் இந்த அறிவிப்புத் தொடர்பில் திருப்தியடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய, மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதியது பழையவை