2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக (ஏப்ரல் – ஜூன்) மின்சார கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்க ‘நேஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிரைவேட்) நிறுவனம்’ பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஏற்கனவே இந்த காலப்பகுதிக்காக நடைமுறைக்கு வந்த 10% கட்டண உயர்வுக்கு மேலதிகமாகவே இந்த புதிய உயர்வும் கோரப்பட்டுள்ளது.
இக்கட்டண திருத்தத்திற்கு முக்கிய காரணங்களாக புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அண்மைய அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும்,அண்மையில் வெளியிடப்பட்ட வானிலை எதிர்வுகூறல்கள் மற்றும் மின்சார அமைப்பில் புதிதாக இணைக்கப்பட்ட மின் நிலையங்களின் தாக்கத்தால் உற்பத்தித் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய மின்சார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சோபாதனவி மின் நிலையத்தின் செயல்பாடு மற்றும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் (KCCP 2) உற்பத்தி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலையேற்றம் மற்றும் நாப்தா பயன்பாட்டைச் சார்ந்த தீர்மானங்கள் மொத்த செலவினங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெப்ரவரி மாதத்தில் 23,151 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவு, மார்ச் மாத இறுதியில் 18,630 மில்லியன் ரூபாவாக சற்று குறைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
அதேவேளை, 2026 ஏப்ரல் – ஜூன் காலப்பகுதிக்கான மொத்த மின்சார உற்பத்திச் செலவு (நாப்தாவுடன்) 111,450 மில்லியன் ரூபாவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பெப்ரவரி மாதத்தில் கணிக்கப்பட்ட 78,069 மில்லியன் ரூபாவை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.