பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற விதத்தில் சிகை அலங்காரம் செய்த இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் அதிகாரிகளால் அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில், மாணவர்களுக்கு பாடசாலை விதிகளுக்கு முரணான வகையில் வித்தியாசமான வடிவங்களில் முடி வெட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக சுமார் 4 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் பிரதேச சபை தவிசாளரிடம் எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (24.04.2026), பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர்.
இதன்போது, மாணவர்களுக்கு முறையற்ற விதத்தில் சிகை அலங்காரம் செய்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு சிகை அலங்கார நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு தவிசாளர் உத்தரவிட்டார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தவிசாளர் மே. வினோராஜ்:
"எமது பிரதேசத்தில் உள்ள 24 சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுடன் ஏற்கனவே நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டை மீறுபவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்திருந்தோம்.
மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிகை அலங்கார நிலையங்கள் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.
சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்தகைய நடைமுறைகளைத் தொடரும் நிலையங்கள் எதிர்காலத்தில் நிரந்தரமாக மூடப்படும்.
மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக எடுக்கப்பட்ட இந்தத் திடீர் நடவடிக்கை அப்பகுதி கல்விச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேவேளை, ஏனைய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களும் மாணவர் விடயத்தில் விதிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.