மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று 35ஆம் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியன கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த "சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா" நேற்று முன் (19.05.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மண்டூர் 35 கண்ணன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
மண்டூர் 35 கண்ணன் வித்தியாலய அதிபர் செ.தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் கௌரவ அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மண்முனை தென்மேற்கு (களுதாவளை) பிரதேசசபை தவிசாளர் மே.வினோராஜ், மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் த.கயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழரசுக்கட்சியின் பாலையடிவட்டை மற்றும் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகப் பெரியார்கள், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் படலக் கல்லடி ஸ்ரீ நாராயணர் ஆலய நிர்வாகிகள், மாதர் சங்கப் பிரதிநிதிகள், 'கைகொடுக்கும் கரங்கள்' அமைப்பின் உறுப்பினர்கள், உள்ளூர் விளையாட்டுத் கழகங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் மைதானத்தில் ஒன்றுதிரண்டு விழாவை சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றம் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் விழா முறைப்படி ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, எமது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ந்து பங்கேற்கும் வகையிலும் பல சுவாரசியமான போட்டிகள் நடத்தப்பட்டன.
சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், தவளை ஓட்டம், சமநிலை ஓட்டம், பலூன் உடைத்தல், மா ஊதி காசு எடுத்தல் போன்ற போட்டிகளும், பாரம்பரிய நிகழ்வுகளான யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், விநோத உடைப் போட்டி, முக அலங்காரப் போட்டி ஆகியவற்றுடன் பெற்றோருக்கான சிறப்புப் போட்டிகள், நீர் வார்த்தல், பான்ஸ் உண்ணல் மற்றும் பெற்றோர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுக்களும் இடம் பெற்றன.
நிகழ்வின் போது அதிதிகளின் சிறப்பு உரைகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு அதிதிகளால் பெறுமதியான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இறுதியாக, ஏற்பாட்டுக் குழுவினரின் நன்றியுரையுடன் தமிழ் - புதுவருட கலாச்சார விளையாட்டு விழா இனிதே நிறைவுற்றது.