மட்டக்களப்பு புளியந்தீவு பகுதி பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட இலவச மருத்துவ முகாம் கடந்த புதன்கிழமை (27.05.2026) அன்று மிக வெற்றிகரமாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இம்முகாம், அப்பகுதி மக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.
விரிவான மருத்துவப் பரிசோதனைகளும் ஆலோசனைகளும்.
இவ்வைத்திய முகாமில் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் பொதுமக்களுக்கு விரிவான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆரோக்கியம் குறித்த உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், நியூ பயணியர் வைத்தியசாலையின் (New Pioneer Hospital) மருத்துவக் குழுவினரால் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தப் பரிசோதனைகளும், சர்க்கரை நோயைக் கண்டறிவதற்கான இரத்த மாதிரிப் பரிசோதனைகளும் அதிநவீன கருவிகள் கொண்டு துல்லியமாக முன்னெடுக்கப்பட்டன.
முகாமில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் பல் பரிசோதனை ஊர்தி (Mobile Dental Unit) பயன்படுத்தப்பட்டது.
பல்வைத்திய நிபுணர்களினால் பொதுமக்களுக்குப் பற் பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், தேவையுடையோருக்குச் சில அவசரப் பல் சிகிச்சைகளும் அவ்விடத்திலேயே உடனுக்குடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலவசக் கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிப் பரிந்துரைகள்
பிரபல கண் மருத்துவ நிறுவனமான விசன் கெயார் (Vision Care) நிறுவனத்தின் கண் பரிசோதனைக் குழாத்தினர் இம்முகாமில் கலந்துகொண்டு, அதிநவீன வசதிகளுடன் கூடிய கண் பரிசோதனைகளைச் இலவசமாகச் செய்து கொடுத்தனர்.
இதன் போது கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட தேவையுடைய நபர்களுக்கு, இலவசக் கண் கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
புளியந்தீவு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களின் சுகாதாரத் தேவைகளைத் தம் கிராமத்திலேயே பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வைத்திய முகாம், எவ்வித தடங்களுமின்றி திட்டமிட்டபடி மிகச் சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.