சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்.!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் நேற்று(22.05.2026) நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட 21 குற்றவாளிகள் குறித்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட குழுவில், உள்ளூர் பொலிஸாரால் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'மகாவத்த சமர' மற்றும் 'வனத்த குடு துமிந்த' ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

இவர்கள் அந்நாட்டில் நடைபெற்ற ஒரு விருந்தின் போது இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


2025 ஆகஸ்ட் 8 அன்று பொரல்லையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், மூவர் காயமடைந்ததற்கும் வழிகாட்டிய நபர்களில் குடு துமிந்தவும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு அழைத்துவரப்பட்ட நபர்கள் மனித படுகொலைகள், கப்பம் கோருதல், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாவதோடு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களுமாவர்.

குறித்த சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்தை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்ட குழுவில் குடு துமிந்தவின் ஐந்து நெருங்கிய கூட்டாளிகளும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


சர்வதேச பொலிஸாரின் உதவி
இதற்கிடையில், போதைப்பொருள் கடத்தல்காரர் மகாவத்த சமர மேலதிக விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களில் பெரும்பாலானோர், ஈரான், டுபாய் மீது நடத்திய தாக்குதல்களைக் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பியதற்காக டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டின் பாதுகாப்புப் படைகள் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட அவர்களின் அனைத்து உடைமைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அவர்கள் அணிந்திருந்த அதே ஆடைகள், கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட குழுவில் இரண்டு பெண்களும் அடங்குவர். இவர்கள் நேற்று  பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சட்டநடவடிக்கைகளைத் தவிர்ப்பதுக்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை