தமிழ் இனத்தின் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வும், ‘உயிர்காத்த கஞ்சி’ வழங்கும் நிகழ்வும் இன்று (18.05.2026)மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கதிரவெளி வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நாளின் பிரதான நினைவேந்தல் நிகழ்வையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேசக் கிளை ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது பட்டினி, பசி, தொடர் குண்டுவீச்சுக்கள் மற்றும் உயிர்ப்பயம் ஆகியவற்றுக்கு மத்தியில் தவித்த தமிழ் மக்களின் துயர வாழ்வையும், அவர்களின் உயிர் காக்க உதவிய கஞ்சியையும் நினைவூட்டும் வகையில் இந்த ‘உயிர்காத்த கஞ்சி’ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இது ஒரு சாதாரண நிகழ்வாக அன்றி, தமிழ் இனத்தின் வலியையும் வரலாற்றையும் தாங்கிய உணர்வுபூர்வமான நினைவேந்தலாக அமைந்திருந்ததாகக் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இறுதிப் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் நினைவுகளை மனதில் நிறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆறாத் துயரம், தாய்மார்களின் கண்ணீர் மற்றும் குழந்தைகளின் ஏக்கங்களைச் சுமந்தபடியும் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட பெருமளவிலான பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுடரேற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, இன அழிப்பில் உயிர்நீத்த தங்களது உறவுகளின் நினைவுகளை கண்ணீருடன் மரியாதையுடன் போற்றினர்.
முள்ளிவாய்க்கால் என்பது வெறும் ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல, அது தமிழ் இனத்தின் வரலாற்றில் எழுதப்பட்ட ஒரு இரத்தச் சாட்சியமாகும். அங்கு உயிர்நீத்த உறவுகளின் தியாகங்களும், அவர்கள் எதிர்கொண்ட வரலாற்றுத் துயரங்களும் என்றும் மறக்கப்பட முடியாதவை என்றும், எமது இனத்தின் உரிமை, நீதி மற்றும் வரலாற்று நினைவுகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.