மட்டக்களப்பு சின்னவத்தையில் வயல்வெளியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு -மின்சாரம் தாக்கியதாகச் சந்தேகம் மூவர் கைது.!

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை வயல் நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களைப் பொலிஸார் (10.05.3026)கைது செய்துள்ளனர்.

​சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த சரவனமுத்து பாலசிங்கம் (53) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (08.05.2026) வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமாகியிருந்தார்.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று(10.05.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள வயல்வெளியில் அவர் சடலமாகக் கிடப்பதை மக்கள் அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

​மின்சார வேலி மரணமா?

​குறித்த பகுதி தமிழர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழும் எல்லைக் கிராமமாகும்.

அங்குள்ள வயல் நிலங்களில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கச் சட்டவிரோத மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் சிங்கள விவசாயிகளின் வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்திருக்கலாம் என உறவினர்களும் கிராம மக்களும் பலமான சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

​இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 இது தொடர்பாகச் சின்னவத்தை  கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

​களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் சின்னவத்தை வட்டார உறுப்பினர் க.யோகராசா சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தினை போரதீவுப்பற்று  பிரதேச சபையின் வாகனத்தினை ஒழுங்கு செய்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

​உயிரிழந்தவரின் மரணம் தற்செயலானதா அல்லது சட்டவிரோத மின்சார இணைப்பு காரணமாக ஏற்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​இலங்கையில் சட்டவிரோத மின்சார வேலிகளை அமைப்பது உயிராபத்தை விளைவிக்கும் பாரிய குற்றமாகக்கருதப்படும் நிலையில், வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை