பொல்கஹாவெலவிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் இன்று (16.05.2026)அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வனவாசல மற்றும் களனி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று (16.05.2026) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த ரயில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், அந்தப் பகுதியில் இருந்த ரயில் கடவையை விபத்து நேரிட்ட தருணத்தில் கடக்க முற்பட்ட கார் ஒன்றும் இந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் காயங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்தையடுத்து குறித்த தடம் வழியிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தடம் புரண்ட ரயிலை மீண்டும் சீரமைத்து போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.