மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ், பிராந்தியத்தின் கல்வி மற்றும் அறிவுசார் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நவீன பொது நூலக வளாகம், எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி (20.05.2026) புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலகத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
🏛️ நீண்டகால உழைப்பும் பின்னணியும்.
மட்டக்களப்பு பிரைன் றீவ் வீதியில் அமைந்துள்ள இந்த ஆசியாவின் பிரமாண்டமான நூலகக் கட்டட வளாகம் உருவாவதற்கு, முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்களின் தூர நோக்கு சிந்தனையும், அதீத முயற்சியும் முக்கியக் காரணியாகக் குறிப்பிடப்படுகிறது.
அவரால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு கல்வி வலயம் போன்றே, இந்த நவீன நூலகமும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் ஒரு முக்கிய பயிற்சி மையமாகவும் திகழும் எனப் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் விமர்சனங்கள் மற்றும் தடைகளையும் தாண்டி, எம்மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்ற துடிப்புடன் செயற்பட்டதன் விளைவே இந்த அணையாத தீபமாகும் என அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையவிருக்கும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மட்டக்களப்பு மாநகர சபை தற்போது மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.