மட்டக்களப்பு காத்தான்குடியில் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல மின்விளக்கு விற்பனை நிலையமான 'Top Lighting' வர்த்தக நிலையத்தில் இன்று (26.05.2026)இரவு 7மணிக்கு  ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், அந்த நிலையம் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

​திடீரென பரவிய இந்த தீ, சில நிமிடங்களில் கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

​தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புப் படையினருடன் இணைந்து, அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தினால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் இல்லை. எனினும், கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்விளக்குகள் மற்றும் பொருட்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

​தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து காத்தான்குடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ பரவல் காரணமாக காத்தான்குடி பிரதான வீதியின் போக்குவரத்தும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
புதியது பழையவை