2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் நினைவாக, மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை (14.05.2026) உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சித்தாண்டி பொதுமக்களின் ஏற்பாட்டில், சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மலர் தூவி தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.
வரலாற்றைக் கடத்தும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’
யுத்த காலத்தின் கொடூரமான பசி மற்றும் வலியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், நிகழ்வின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
எம் முன்னோர்கள் அனுபவித்த துயரங்களை இளம் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத்.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் முரளிதரன்.
பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்தூகொண்டனர்.
போரின் வடுக்களையும், இழப்புகளையும் சுமந்தபடி சித்தாண்டி மக்கள் ஒன்று கூடி, தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியதோடு, வரலாற்றின் சாட்சியாக கஞ்சி வழங்கும் நிகழ்வையும் முன்னெடுத்தனர்.